Sunday, November 06, 2011

பகவன்


பகவன்

- காஞ்சிபுரம். தி. அனந்தநாத நயினார்

பக என்பதற்கு ‘ஞானம்’ என்பது பொருளாம். அதனடியாக உண்டான ‘பகவன்’
என்பதற்கு ‘ஞானமுள்ளவன்’ என்று அர்த்தமாகிறது. எனினும் சாமானியமாக
ஒருவனுக்கு ஞானமிருப்பதினாலேயே அவனைப் ‘பகவன்’ என்று சொல்லிவிட
முடியாது. அப்படிச் சொல்லப் புகுந்தால் ஞானமுள்ள எல்லா ஜீவன்களையுமே
‘பகவன்’ என்று சொல்ல வேண்டும், அவ்வாறு கொள்ளுதல் கூடாது.

ஆதலின், ‘பகவன்’ என்ற நாமதேயத்தை, இதர ஜீவன்களைக் காட்டிலும்
விசேஷ ஞானமுள்ள சர்வக்ஞ பரமாத்மனுக்குப் பெரியோர்கள்
உபயோகித்திருக்கிறார்கள். ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமி சர்வக்ஞனாக இருப்பதால்,
‘பகவன்’ என்ற பெயர் அந்த ஸ்வாமிக்குப் பொருத்தமானதாக இருக்கிறது.

பக்ஷபாதமில்லாமல் நாம் உண்மையை விளக்கும் உயர்ந்த பல
சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்ப்போமானால், ராக, த்வேஷ, மோக
காமம், வெகுளி, மயக்கம்) ஜன்ம, மரண முதலான தோஷங்களுக்கு
ஆதீனனாகிய ஜீவன் ஒருபோதும் சர்வக்ஞனாக இருக்க முடியாதென்பது
நமக்கு விளக்கமாகத் தெரியவரும். அங்ங்னமிருக்க மயக்க சாஸ்திரங்கள்
மேற்சொன்ன ராக த்வேஷ மோக முதலான விகாரங்களுக்குள்ள
ஜீவன்களைக் கூட சர்வக்ஞனென்று சொல்லுகின்றன; ஆனால், தத்துவ
போதமுள்ள ஞானிகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆகையால்
ராக த்வேஷ மோக முதலான விகாரங்களின்று சம்பூர்ணமாக நீங்கியிருக்கிற
பரமாத்மனே சர்வக்ஞனாவன். அதாவது ‘பகவன்’ என்ற
திருநாமத்திற்குரியவனாவன்.

ஸ்ரீ ஆதி தீர்த்தங்கரஸ்வாமி மேற்சொன்ன சகல விகாரங்களினின்றும்
நீங்கியிருப்பவன் என்பதும், அதனால் சர்வக்ஞனென்பதும் ஜைந சமய
சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்தால் நன்கு விளங்கும். இந்த நியாயம்
பற்றி ஆதிநாத ஸ்வாமியையே ‘பகவன்’ என்று திருக்குறள் ஆசிரியர்
கூறியிருக்கின்றார்.

இனி, ‘பக’ சப்தத்திற்கு ‘யஸஸ்’ என்ற மற்றொரு அர்த்தம் இருப்பதால்;
இதன்படி , பக்வன் என்பதற்கு, யஸஸ்ஸுடையவன் என்று அர்த்தமாகும்;
ஆதலின், இப்பெயர் மூன்று லோகங்களிலேயும் வியாபித்திருக்கும் ‘யஸஸ்’
ஸை அடைந்தவராகிய ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமிக்கே தகும்.

ஸ்ரீ ஆதிபகவான், லோகோத்தாரணத்துக்காகச் சமவசரண விராஜமானராக
விருந்தபோது, மூவுலகங்களிலுமுள்ள பவ்விய பிராணிகள் அந்தச்
சமவசரணத்துக்கு வந்து, பூர்ண சந்திர மண்டலத்தைத் தாராகணங்கள்
சுற்றியிருப்பதைப் பொள் சுவாமியைச் சுற்றிலும் பக்தி வணக்கத்தோடு
சூழ்ந்து அவரது தர்மோபதேசமென்னும் அமிர்தபானத்தைச் செய்து
அஜராமரத்வத்தை (மூப்பு, சாக்காடு) அகற்றக் கூடிய ஒழுக்கத்தை
சம்பாதித்துத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிப் போய்
ஆங்காங்குப் பகவந்தனது ‘யஸஸ்ஸை’க் கொண்டாடினார்கள்.
ஆகையால் ஆதி பகவனது திவ்ய ‘யஸஸ்’ மூவுலகங்களிலும்
வியாபித்தது. இப்படி லோகோத்தர ‘யஸஸ்ஸை’ அடைந்த
ஆதீஸ்வர ஸ்வாமியானவர் ‘பகவன்’ என்று மஹரிஷிகளால்
ஸ்துதிக்கப் பட்டிருக்கிறார்.

மேற் கூறியபடி பலரும் பகவானைச் சூழ்ந்து கொண்டாடினார்கள் என்பதை, ”ஆதீஸ்வரஸ்வாமியின் சமவசரணத்தில் பன்னிரெண்டு விதமான கணங்கள்
திவ்யோப தேசத்தைக் கேட்கக் கூடினார்கள்” என்று மகாபுராண சுலோகம்
விளக்கும்.

பன்னிரெண்டு வித கூட்டங்களாகக் கூடியிருந்த மூன்று லோகங்களிலுமுள்ள
பவ்விய பிராணிகள் இந்த மூன்று லோகங்களிலும் சுவாமியின் லோகாதி
சாயியான யஸஸ்ஸைக் கொண்டாடினதினாலும், அந்த யஸஸ்ஸே, ‘பக’
என்று சொல்லப்படுவதாலும் அந்த யஸஸ்ஸக்குப் பாத்திரராகிய ஸ்ரீ ஆதி
தீர்த்தங்கரரே ‘பகவன்’ என்று சொல்லப் படுகிறார்.

இனி, ‘பக’ என்பதற்கு ‘மாஹாத்மயம்’ என்ற அர்த்தமும் இருப்பதால் ஸ்ரீ
ஆதி தீர்த்தங்கரர் என்னும் ஆதிபகவன் ஸ்வபாவாதிசயம் பத்து,
கர்மக்ஷயாதிசயம் பத்து, தெய்வீகாதிசயம் பதினான்கு ஆகிய இந்த
முப்பத்திநான்கு அதிசயங்கள் தாமே தோன்றிய மாஹாத்மய
முடையவராதலால் அந்த வகையிலும், ‘பகவன்’ என்ற நாமம்
அவர்க்கே தகும்.

இன்னும், ‘பக’ என்பதற்கு ‘முத்தி’ என்ற அர்த்தமுமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு ‘முக்திக்குரியவன்’ என்று பொருளாம். ஸ்ரீ ஆதிநாதபகவான்
‘முத்தி’யை அடைந்திருகின்றார்; பிறருக்கும் மோக்ஷ ஸ்வரூபத்தை உபதேசித்திருக்கின்றார்; இவர் அடைந்ததும், பிறருக்குபதேசிக்கப்பட்டதுமான
முத்தியே சரியானது. இதனை “நூற்றுக்கணக்கான கல்பங்கள் கழிந்து
போனாலும் மூவுலகத்தையும் பிரமிக்கச் செய்யும் உத்பாதங்கள்
உண்டானாலும் மூத்த ஜீவன்களிடத்தில் எவ்விதமான விகாரமும்
உண்டாவதில்லை” என்று மகாபுராணச் சுலோகம் விளக்கும்.

அநேக இதர மதக் கிரந்தங்களில் முத்தியடைந்தவர்கள் ஒரு காலத்தில்
மறுபடியும் சம்ஸாராவஸ்த்தைக்கு வருவார்களென்பது சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ஆதிநாத பகவந்தன் அடைந்ததும், பிறருக்குபதேசித்ததுமான ‘முத்தி’
யானது, பிறவிக் கிடமில்லாததாயும் சர்வோத் கிருஷ்டமானதாயுமிருக்கின்றது. இப்பேர்ப்பட்ட முத்தியை அவர் அடைந்திருப்பதால் ‘பகவன்’ என்ற
பவித்ர நாமத்திற்கு யோக்கியமானவர் அவரேயாவர்.

பின்னும், ‘பக’ என்ற பதத்திற்கு “ஐஸ்வரிய’ மென்ற அர்த்தமுமிருப்பதால்,
‘பகவன்’ என்பதற்கு “ஐஸ்வரியமுள்ளவன்’ என்றும் பொருளாம். ஆதிநாத
சுவாமியின் அவதார முதல் கைவல்ய பரியந்தம் இவ்வுலகின் சகல
ஐஸ்வரியங்களும் மேல்படி ஸ்வாமியின் சரணாரவிந்தங்களில் இருப்பனவாகத் தெரிகின்றன. ஆத்ம சம்பத்தும் மேற்சொன்ன விஷயங்களினாலும்
இப்புத்தகத்தில் விளக்கிய இதர விஷயங்களாலும் அவரிடத்தில்
அமைந்திருக்கின்றது என்பது விளங்கும். இப்படி அசாதரணமாகிய
ஐஹிக பாரமார்த்திக (இகபரலோக) சம்பத்துக்களுக்கு ஸ்வாமி
உடையவராதலால், ‘பகவன்’ என்ற பெயர் அவர்க்கே தகும்.

மேலும், ‘பக’ என்பதற்கு ‘வீரிய’மென்ற அர்த்தமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு, “வீரியமுள்ளவன்” என்றும் பொருளாம். ஆத்ம பலமே
வீரியமென்று சொல்லப்படும். சம்ஸாரத்தில் சகல பிராணிகளுக்கும்
ஜன்ம மரண துக்கங்களுக்குக் காரணமாயிருக்கின்ற கர்மம்க்களைச்
சம்பூர்ணமாகச் சமஹரித்துத் கைவல்யத்தை அடைந்ததான ஆத்ம
பலத்தை சுவாமி அடைந்திருப்பதாலும் மூவுலகங்களிலும் இதரர்களுக்கு
அலப்பியமான (கிடைக்கத்தகாதது) சகல சம்பத்துக்களும் இந்த ஆதி
தீர்த்தங்கரருக்கிருந்தும் இவர் அவைகளைச் சம்பூர்ணமாகத் தியாகம்
செய்து பரம வைராக்கியத்தை அடைந்ததினாலும், ‘பகவன்’ என்ற
பெயருக்கிவரே உரியவராவர்.

இன்னும் ‘பக’ என்பதற்கு தர்மம் என்ற அர்த்தமிருப்பதால் ‘பகவன்’
என்பதற்கு “தர்மத்திற்குரியவன்” என்றும் பொருளாம். ஆதிநாத சுவாமி
தாமே தர்ம மூர்த்தியாக இருந்து உலகத்திற்கு அஹிம்ஸை முதலான
அநேக தர்மத்தைப் போதித்திருக்கின்றார். ஆதலின் இந்த வகையிலும்
‘பகவன்’ என்ற பெயர் அவருக்கே உரியதாகும்.

இவற்றை எல்லாம் நன்கு ஆராய்வோர்ம் திருக்குறளாசிரியர் (ஆதி)
பகவன் என்ற சொல்லால் அருகக் கடவுளையே குறிப்பிட்டு வணங்கி
இருக்கிறார் என்பதை ஐயமற உணர்ந்துக் கொள்ளலாம்.


சுபம்!

No comments: